Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் தீவையும், எமது இருப்பையும் பாதுகாக்க ஒன்று சேர்ந்து ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.!

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் தீவில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரம் அமைத்தல் மற்றும...

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்


மன்னார் தீவில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு விடயத்தில் அரசாங்கம் ஒரே நிலைப்பாட்டில் காணப்படுகின்றமையினால் மன்னார் மக்கள் எமது மண்ணையும், எமது வாழ்வியலையும் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.


காற்றாலை அமைத்தல் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை (7) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (8) மதியம் மன்னாரில் இடம்பெற்றது.


குறித்த ஊடக சந்திப்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (7) வடக்கு கிழக்கை சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் அமைச்சர்கள் பங்குபற்றுதலுடன் மன்னாரைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களுடன் இணைந்து மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரம் அமைப்பது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த கலந்துரையாடலில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க கூடிய எந்த வாய்ப்பும் அங்கு கிடைக்கவில்லை. வருகை தந்த அதிகாரிகள் சரி, அமைச்சர்களும் சரி எமது கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கி செவிமடுக்கவும் இல்லை. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதையே அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினார்களே தவிர பாதிப்புக்கள் சம்மந்தமாகவோ அல்லது மக்கள் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை.



மின்சார சபையினுடைய நிறைவேற்று அதிகாரிகள் உண்மைக்கு மாறான தகவல்களையும்,பொய்யான விடயங்களையும் அக்கூட்டத்தில் முன்வைக்க முயன்றார்கள். அதனை நாங்கள் முழுமையாக மறுத்தோம். மன்னார் தீவு பகுதியில் முழுமையாக காற்றாலை அமைப்பதையும், கனிய மண் அகழ்வை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கின்ற விடயங்களை நாங்கள் வலியுறுத்தினாலும் அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மாறாக மீண்டும் பேச்சுவார்த்தை ஊடாக காலத்தை கடத்தி இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர்கள் கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட திட்டம் எனக் கூறிக் கொண்டாலும் கூட இந்த அரசுதான் சீலிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கேளிஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏனைய மண் விவகாரங்களுடனும் தொடர்புபட்டு இருக்கின்றது என்கின்ற விடயத்தை நாங்கள் ஆதாரத்துடன் கூறினாலும் கூட அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.



இரண்டு வாரத்தில் ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயத்தை முடிவுறுத்தலாம் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். தற்காலிகமாக இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியை பார்க்கின்ற போது எமக்கு கவலை ஏற்படுகின்றது. அவ்விதமான எந்த முடிவும் நேற்றைய(7) கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆலோசிக்கப்பட்டதே தவிர எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. குறித்த கூட்டம் முடிவின்றி முடிந்து போனது.



குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட எங்களுக்கு எவ்வித திருப்தியும் இல்லை. அரசாங்கம் தாங்கள் நினைத்தபடி இனப்பிரச்சினை விவகாரத்தை எவ்வாறு கையாள்கின்தோ அவ்வாறு தான் அபிவிருத்தித் திட்டங்களையும் கையாள முனைகின்றது. தான்தோன்றித்தனமாக இத்திட்டங்களை தாங்கள் நினைத்த படி செய்து முடிக்கலாம் என யோசிக்கின்றது. இவ் விடயங்களில் மன்னார் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.



நாங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஜனநாயக ரீதியாக அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை கொடுக்கும் வகையில் நாங்கள் அணி திரளாது விட்டால் இத்திட்டங்களை எங்களினால் நிறுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.



ஆபத்தான ஒரு நிலையை நோக்கி இத் திட்டங்களினுடைய செயற்பாடுகள் நகர்ந்து கொண்டு செல்கிறது. சில அற்ப சொற்ப சலுகைகளுக்காக சில கிராமங்களில் இதை செயற்படுத்துகின்ற நிறுவனங்கள் மக்கள் சிலருக்கும், அமைப்புகளுக்கும் சில சலுகைகளை வழங்கி அவர்களை விலைக்கு வாங்கி தமக்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.



எனவே இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து ஜனநாயக ரீதியாக போராடி எங்களுடைய வாழ்வியல் இருப்பு உரிமையையும் வாழ்வாதார இருப்பையும் மன்னாரினுடைய உரிமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் எல்லோரும் முன் வர வேண்டும்.



அரசை நாங்கள் இனியும் நம்பி அரசினுடைய ஜனநாயக கருத்துக்களுக்கு செவி சாய்த்து இந்த விடயங்களில் எமக்கு முன்னேற்றம் ஏற்படும் என்றோ அல்லது சாதகமான பதில் கிடைக்கும் என்றோ அல்லது அரசு இந்த திட்டங்களை நிறுத்தும் என்றோ நாங்கள் நம்பவும் இல்லை. நம்பக்கூடிய அளவுக்கு அவர்களின் சந்திப்புகளும் இல்லை.



கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இந்த பாதிப்புகள் பற்றி தெரிவித்து வந்தாலும் கூட நேற்றைய கூட்டத்தின் போது அங்கு வருகை தந்த அதிகாரிகள் முதலாவது தடவையாக இவ்விடயங்கள் பற்றி பேசுவது போல் நடந்து கொண்டார்கள். கடந்த காலத்தில் முன் வைக்கப்பட்ட எந்த கோரிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அவர்கள் கண்டு கொள்ளவும் இல்லை. அவ்வாறான ஆவணங்கள் இருப்பதாக கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.



ஆகவே இந்த நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். குறித்த காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களையும் மன்னார் தீவு பகுதிக்குள் நடைமுறைப்படுத்த விட முடியாது என்று. ஆனால் அரசாங்கம் குறித்த இரு திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும் என்கிற வகையிலும் அரசு யோசிக்கிறது.



எனவே மக்களின் கைகளில் இருக்கிறது. இத்திட்டங்களை நிறுத்துவதற்கு நீங்கள் தார்மீக அடிப்படையில் நான் ‘மன்னாரான்’ என்ற வகையில் இந்த மண்ணை காத்துக் கொள்ளுகின்ற எண்ணமும் தொழிலும் எமது அடுத்த சந்ததியினரின் வாழ்வியல் இருப்பிற்கு இது அவசியம் என்பதை உணர்ந்து நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும். நாங்கள் ஒன்று சேர்ந்து போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

hill